Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் வறண்ட இரு குளங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகும் அபாயம்

தேனி: தேனியில் இரு குளங்களின் நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமித்துள்ளதால் குளங்கள் வறண்டு வானம்பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது. மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேனி ஒன்றியதிற்கு உட்பட்டு ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் என்.ஜி.ஓ., காலனி பகுதியில் 6 ஏக்கரில் கோளப்ப ராமகவுண்டர் குளம் அமைந்துள்ளது. அன்னஞ்சி விலக்கு பகுதியில் தேவக்கம்மாள் ஊரணி 2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த இரு குளங்களுக்கும் சிகு ஓடை கண்மாய் நிரம்பி மறுகால் நீர் வாய்க்கால் வழியாக வெளியேறி குளங்களுக்கு செல்ல வேண்டும். இந்த கண்மாயில் இருந்து வரும் நீர் வாய்க்கால் வழியாக பைபாஸ்ரோட்டில் அமைந்துள்ள தடுப்பணை பகுதிக்கு வருகிறது. அங்கிருந்து நீர் செல்வதற்கான கால்வாய் இருபுறம் நிலம் வைத்துள்ளவர்களின் ஆக்கிரமிப்பால் சுருங்கி, கழிவுநீர் செல்லும் கால்வாயாக உள்ளது. இதனால் இரு குளங்களும் பல ஆண்டுகளாக நிரம்பாமல் வானம் பார்த்த பூமியாய் வறண்டுள்ளது.

தற்போது கோளப்பராம கவுண்டர் குளம் ரூ.10 லட்சம் மதிப்பில் துார்வாரப்பட்டுள்ளது. இந்த குளம் மழைநீரை நம்பி மட்டுமே உள்ளது. குளத்திற்கான நீர் வரத்து ஓடைகள் முழுவதும் புதர்கள் மண்டியும், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதே நிலை தேவக்கம்மாள் ஊரணியிலும் உள்ளது. இரு குளங்களும் நிரம்பி கால்வாய் மூலம் வடபுதுப்பட்டி, சொக்கத்தேவன்பட்டி வழியாக வைகை அணைக்கு நீர் செல்லும். இந்த நீர்நிலைகளுக்கான வழித்தடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், இப்பகுதியில் குடியிருப்போரின் கோரிக்கையாகும்.

ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

மணி, வியாபாரி, ஊஞ்சாம்பட்டி :சிகு ஓடைகண்மாயில் இருந்து வரும் வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த இரு நீர்நிலைகளிலும் நீர் நிரம்பினால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கும்.

குடியிருப்பிற்குள் உட்புகும் தண்ணீர்

கருப்புச்சாமி, குடியிருப்போர் நலச்சங்கம், மணிநகர் :தண்ணீர் வரும் வாய்க்கால் பல இடங்களில் முறையாக இல்லை. சில இடங்களில் குறுகலாக காணப்படுகிறது. சில மாதங்களுக்குமுன் வாய்காலில் அதிக அளவு தண்ணீர் வந்த போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. வரும் காலங்களில் இதனை தவிர்க்க வாய்க்கால் மீட்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை தேவை

பிரகாஷ், தலைவர், சிகு ஓடை கண்மாய் பாசனவிவசாயிகள் சங்கம், ஊஞ்சாம்பட்டி :இந்த நீர்வரத்து ஓடைகளால் இங்குள்ள மணிநகர், ஜெயம்நகர், என்.ஜி.ஓ., காலனி, ரத்தினம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பயன்பெறும். வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற நீர்வளத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து அகற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவைக்காக பிரச்னைகளை சந்திக்க நேரிடும். கோடை காலத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டால், அடுத்த மழைகாலத்தில் நல்ல பயனளிக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *