பெரியாறு பாசன விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு கேரள தரப்பு அதிகாரிகள் மத்திய கண்காணிப்பு குழுவில் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையை கண்காணிப்பதற்காக மத்திய அரசு புதிய கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தியுள்ளது. இதில் கேரளத் தரப்பு அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டு ஒப்பந்தத்தின்படி தமிழக நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் முழுவதும் தமிழக நீர்வளத்துறையால் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து அணை, ஷட்டர் பகுதி, காலரி, குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கலைப்பு
இப்பணிகளை கண்காணிப்பதற்காக 2000ல் உச்ச நீதிமன்றத்தால் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அணையை ஆய்வு செய்து வந்தது. இக்குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. மாதந்தோறும் அணையை ஆய்வு செய்து மத்திய குழுவிற்கு பராமரிப்பு பணிகள் குறித்த அறிக்கை அனுப்பி வந்தது.
இந்நிலையில் 2021ல் லோக்சபாவில் இயற்றப் பட்ட அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. இதனால் 2024 நவ., அணையை கண்காணித்து வந்த மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு ஆகிய இரண்டும் கலைக்கப்பட்டது.
புதிய கண்காணிப்புக்குழு
தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழுவை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உறுப்பினர்களாக கேரள தரப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்: புதிய கண்காணிப்பு குழுவில் கேரளாவைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்ப்பாசனத் துறைச் செயலாளர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு எதிராக செயல்பட்டு வந்தவர்கள்.
அணை குறித்த புரிதல் இவர்களுக்கு இல்லை. இக்குழுவில் கேரள தரப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட உடனேயே அணையை ஒட்டி புதிய அணை கட்டுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கேரள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களும் அறிக்கை வெளியிட துவங்கி விட்டனர். இது தமிழக விவசாயிகளுக்கு எதிராக உள்ளது.
அதனால் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவில் கேரள தரப்பு அதிகாரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜன.,25ல் குமுளி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.