விளைந்த நெற்பயிர்களுக்கு சாரல் மலையால் பாதிப்பு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடவு செய்த நெல் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் சில நாட்களாக இப் பகுதியில் அடுத்தடுத்து சாரல் மழை பெய்து பாதிப்பு ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி பகுதியில் வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள அம்மச்சியாபுரம், குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, ஸ்ரீரங்காபுரம், அய்யணத்தேவன்பட்டி, வேகவதி ஆசிரமம், புதூர், மூணாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை கிராமங்களில் பல நூறு ஏக்கரில் நெல் சாகுபடி உள்ளது.
கடந்த அக்., நவ. விதைப்பு செய்த நெல் தற்போது வளர்ந்து கதிர் பிடித்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் சில நாட்களாக அவ்வப்போது பெய்யும் சாரல் மழை அதனை தொடர்ந்து வீசும் குளிர் காற்று நெல் பயிர்களை சாய்த்து விடுகிறது.
விவசாயிகள் கூறியதாவது: நெல் பயிரின் தற்போதைய பருவத்திற்கு வெயில் ஏற்றது. பனியின் தாக்கத்துடன் வெயிலின் தாக்கமும் இருக்க வேண்டிய தை மாதத்தில் பெய்யும் சாரல் மழை விளைந்த பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றனர்.