ஏல விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண திட்டம் அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை
கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் ஏல விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. பெரும்பாலும் கம்பம், கூடலூர், தேவாரம், காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, உத்தமபாளையம் பகுதி விவசாயிகள் ஏலக்காய் சாகுபடி செய்கின்றனர்.
கடந்தாண்டு துவக்கத்தில் பல மாதங்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. அதில் ஏலச் செடிகள் கருகின. பின் ஒரு மாதம் பெய்த கனமழையால் ஏலச் செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
அழுகல் நோய், காற்றில் செடிகள் ஒடிந்து. இதனால் மகசூல் பாதிப்பு 40 முதல் 50 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2024 மே மாதம் கேரள வேளாண் துறை அமைச்சர் பிரசாத் , நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் ஆகியோர் வண்டன் மேடு, குமுளி, கம்பமெட்டு பகுதிகளில் வறட்சியால் பாதித்த ஏலத்தோட்டங்களை ஆய்வு செய்து கூறுகையில் , ’40 ஆயிரம் ஏக்கர் ஏலத்தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
22 ஆயிரம் ஏல விவசாயிகளுக்கு ரூ.113 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதர பயிர்கள் ரூ.60 கோடி வரை பாதிக்கப்பட்டுள்ளது. ஏலத்தோட்டங்களை இன்னமும் முழுமையாக கணக்கெடுக்க உள்ளோம்,’ என்றனர்.
அதன் பின் தொடர் நடவடிக்கை இல்லை. இடுக்கி ஏல விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். ஏல விவசாயத்தை காக்க ஸ்பைசஸ் வாரியம் வர்த்தக அமைச்சகம் மூலம் மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும். ஏலக்காய் விலை ரூ.3 ஆயிரத்திற்கு மேல் விலை கிடைக்கிறது என்று கூறுகின்றனர். ஆனால் எந்த தோட்டத்திலும் ஏலக்காய் இல்லை என்பது தான் உண்மை, எனவே விலை கிடைத்தும் விவசாயிகளுக்கு பயனில்லை என்பது நிதர்சனமான உண்மை. எனவே, ஏல விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண திட்டம் அறிவிக்க வேண்டும் என்று ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.