7500 மீ., துாரம் நீந்தி 6 வயது பள்ளி மாணவர் ஆசிய சாதனை
‘ஆறு வயது பள்ளி மாணவர் திரினேஷ் 7500 மீ., நீள துாரத்தை 3 மணி 15 நிமிடங்களில் நீந்தி ஆசிய சாதனை பட்டியலில் இடம் பிடித்தார்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம், குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வு நடந்தது. லட்சுமிபுரம் ஸ்ரீரேணுகா வித்யாலயம் மெட்ரிக் பள்ளி 2ம் வகுப்பு மாணவர் திரினேஷ் சாதனை நிகழ்வில் பங்கேற்றார்.
இவர் 25 மீ., நீளமுள்ள நீச்சல் குளத்தை 300 முறை நீந்தினார். இந்த சாதனையை அவர் 3:00 மணி 15 நிமிடம் 51 வினாடிகளில் நிகழ்த்தினார். ஆகிய அளவில் குறைந்த வயதில் இந்த துாரத்தை நீந்தி கடந்தவர் என்ற சாதனையை பதிவு செய்தார். சாதனையை பதிவு செய்து யூனிவர்சல் ரெக்கார்ட் போரம் அமைப்பு சார்பில் அதன் நிர்வாகி சுனில் ஜோசப் சான்றிதழ் வழங்கினார்.
பள்ளி தாளாளர் லதா, பள்ளிச் செயலாளர் விஜயராணி, உறவினர்கள் பாரட்டினர். நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் கூறுகையில், ‘திரினேஷ் ஓராண்டிற்கு மேல் நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறார். இச்சாதனை நிகழ்த்த மாணவர் ஆறு மாதங்களாக தொடர் பயிற்சி மேற்கொண்டார்’, என்றார்.