Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

பங்காருசாமி நாயக்கர் கண்மாய் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியும் பயன் இல்லாத நிலை ஷட்டர்கள் பழுதால் நீர் வீணாகும் அவலம்

போடி: போடி அருகே பங்காருசாமி நாயக்கர் கண்மாய் ஷட்டர்கள் பழுதால் கண்மாயில் தேங்கியுள்ள நீர் வீணாக வெளியேறும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது

போடி – தேனி செல்லும் மெயின் ரோட்டில் 107 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பங்காருசாமி நாயக்கர் கண்மாய். குரங்கணி, கொட்டகுடி பகுதியில் பெய்யும் மழை நீர் அணைப்பிள்ளையார் அணை வழியாக இக்கண்மாய்க்கு வருகிறது. கண்மாய் நிரம்பியதும் அருகே உள்ள மீனாட்சியம்மன் கண்மாய், சங்கரப்பன் கண்மாய் சென்றடையும். பங்காருசாமி கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் மூலம் 1300 ஏக்கர் நேரடியாகவும், 400 ஏக்கர் மறைமுகமாகவும், கிணறுகளில் நீரூற்றும் கிடைக்கும். பங்காருசாமி கண்மாயில் ஆகாய தாமரை செடிகள் சூழ்ந்து உள்ளதால் கண்மாய்க்கு வரும் மழை நீரை முழுவதும் சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

சேதமான ஷட்டர்களால் வீணாகும் நீர்

வாசுகன், விவசாயி, போடி : இக் கண்மாய் நிரம்புவதன் மூலம் அணைக்கரைப்பட்டி, மீனாவிலக்கு, தோப்புப்பட்டி, பொட்டல்களம் உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். கண்மாயின் தெற்கு, வடக்கு மடையின் ஷட்டர் பகுதி உடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் கண்மாயில் தேங்கிய நீர் வீணாக வெளியேறுகிறது. வெயில் காலத்தில் தண்ணீர் குறைந்து விடுகிறது. சேதம் அடைந்த ஷட்டர் சீரமைக்கவும், குடிமராமத்து பணிகள் செய்திட ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி பணி செய்யாமல் வேறு பணிகளுக்கு நிதி பயன்படுத்தப்பட்டது. சேதம் அடைந்த ஷட்டர்களை சீரமைத்திட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதை சீரமைக்க வேண்டும்

சுதாகர், விவசாயி, அணைக்கரைப்பட்டி : கண்மாக்கு நீர் வரும் பாதையான கொட்டகுடி ஆறு, ராஜ வாய்க்கால ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்பால் பாதை குறுகலாக உள்ளது. கண்மாயில் வளர்ந்த முட்செடிகள் மரங்களாகி அதன் வேர்கள் ஷட்டர் தடுப்பு பகுதிகளை சேதப்படுத்துகிறது. கண்மாயை சுற்றி 150 ஏக்கர் அளவில் கரும்பு, நெல், மக்காச்சோளம், தென்னை விவசாயம் நடந்து வருகிறது. கண்மாய் கரை பலம் இன்றி இருப்பதால் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து, தடுப்புச் சுவர் சேதம் அடைந்து உள்ளது. கரை பாதை ரோடு வசதி இன்றி முட்செடிகளாக உள்ளன. டூவீலர், டிராக்டரில் கூட செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்மாய் கரையை மேம்படுத்துவதோடு, ரோடு வசதி செய்து தர பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *