அரசு பள்ளி அருகே செயல்படும் மதுபாரை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்
–தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அரசு பள்ளி மேல்நிலைப்பள்ளி அருகே செயல்படும் மதுபாரை மூடக்கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 600 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு 37 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். பள்ளி அருகே 100 மீட்டர் தூரத்தில் தனியார் மதுபார் செயல்படுகிறது. கடந்த ஆண்டில் இப்பள்ளி மாணவர் மதுபோதையில் ஆசிரியரை கத்தியால் மிரட்டியது. வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து பார் ஒருவாரம் மூடப்பட்டிருந்தது. பின் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இப் பாரை மூடகோரி பெற்றோர், அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
பாரை மூடக்கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட அமைப்பாளர் பாரதி தலைமையில், பா.ஜ., நிர்வாகி முனியாண்டி, நா.த.க. மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், பா.ம.க., மாவட்ட நிர்வாகி காஜாமைதீன் உட்பட பல்வேறு கட்சியினர் பொதுமக்கள் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாணவர்களுக்கு கவுன்சிலிங்
முத்துலட்சுமி, தலைமையாசிரியை,அரசு மேல்நிலைப்பள்ளி : சில மாணவர்கள் போதை பழக்கத்திற்கு உட்பட்டதால் பார் நடத்துபவரிடம் நானே சென்று வேறு இடத்திற்கு மாற்றிடுமாறு முறையிட்டும் பயன் இல்லை.
வட்டார ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் செந்தில்குமார், ‘பள்ளி மாணவர்கள் சிலருக்கு போதை பழக்கம் ஏற்பட்டது. வியாழன் தோறும் 50 பேருக்கு கவுன்சிலிங் வழங்கி 15 பேர் அப் பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளனர். நல்ல பலன் கிடைத்துள்ளது.
படிப்பின் மீது கவனம் செலுத்துகின்றனர்.