தேனி பஸ் ஸ்டாண்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தேனி : சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு அலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தேனி உட்பட 4 மாவட்டங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் வெடி குண்டு வெடிக்கும் என தெரிவித்து இணைப்பை துண்டித்தார். சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேனி எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் மெட்டல் டிடெக்டர்,மோப்பநாயுடன் சோதனை செய்தனர். மிரட்டல் புரளி என தெரியவந்தது. சில நாட்களுக்கு முன் தேனி
கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் தற்போது தேனி பஸ் ஸ்டாண்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.