வைகை அணை கால்வாய் மூலம் நீர் திறப்பு தற்காலிக நிறுத்தம் ‘
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் முறைப்பாசன அடிப்படையில் தற்காலிகமாக நேற்று காலை நிறுத்தப்பட்டது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாய் இரு போக பாசன நிலங்களுக்கு ஜூலை 3, திருமங்கலம் பிரதான கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கு செப்.,15 ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் அணையில் சில நாட்கள் நீர் திறந்து விடப்படும் சில நாட்கள் நிறுத்தப்பட்டும் வருகிறது.
நவ.,23 ல் முறைப்பாசன அடிப்படையில் வினாடிக்கு 1100 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள நிலங்களுக்கு ஆற்றின் வழியாக வினாடிக்கு 500 கன அடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடியும் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
நேற்று வைகை அணை அணை நீர்மட்டம் 56.40 அடியாக இருந்தது(அணை உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 668 கனஅடியாக இருந்தது.