கடமலைக்குண்டு அருகே பொதுப்பாதையின் ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
வருசநாடு: கடமலைக்குண்டு அரசு கிராம மக்களுக்கான பொதுப்பாதையை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பனு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு ஊராட்சியில் வனத்தாய்ப்புரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஊர் பொதுக்கிணறு மற்றும் ஓடைக்கு செல்லும் பாதையை, அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து வருவாய்த்துறையினர் அளவீடு செய்ததில், கிராம பொதுப்பாதை உட்பட சுமார் இரண்டு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி முள்வேலி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது தனி நபர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, நேற்று மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு நிலத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, சர்வேயர் ஜெகன், சார்பு ஆய்வாளர்கள் ராமசாமி, கண்ணன், அரசு ஒப்பந்ததாரர் தினேஷ், ஊராட்சி செயலர் துரைப்பாண்டி, மயிலாடும்பாறை கிராம அலுவலர் ரகு உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு செய்த தனி நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் பிரச்னையின்றி நடைபெற்றது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.