தேனி நகராட்சியுடன் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி வார்டுகளை இணைக்கக் கூடாது: கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்
தேனி: தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சிக்குட்பட்ட சில வார்டுகளை, தேனி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனி அருகேயுள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பேபி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் பாலசந்தர் வரவேற்றார். இதில் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியை மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தேசிய வாக்காளர் இயக்கம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பேசினர். மேலும், தமிழ்நாடு அரசு தேனி – அல்லிநகரம் நகராட்சியுடன் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சில வார்டுகளை இணைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை அரசு மறுபரீசிலனை செய்து, ஊஞ்சாம்பட்டி ஊராட்சியின் வார்டுகளை தேனி நகராட்சியுடன் இணைக்கக்கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.