அரசு பஸ் மீது சரக்கு வாகனம் மோதல்
கொடைக்கானல்: மதுரையில் இருந்து கொடைக்கானல் நோக்கி, நேற்று அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. கொடைக்கானல் மலைச்சாலையில் நண்டாங்கரை என்ற இடத்தில் கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற சரக்கு வாகனம், எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் ரோட்டின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்தது. இந்த விபத்தால் கொடைக்கானல் மலைச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து வந்த தாண்டிக்குடி போலீசார் சரக்கு வாகனம், அரசு பஸ்சை ஓரங்கட்டி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.