அச்சத்தில் தொழிலாளர்கள்
மூணாறு: மூணாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புலியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள எஸ்டேட் பகுதிகளில், சில நாட்களாக புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மூணாறு நகரில் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் நேற்று காலை 11 மணியளவில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த புலியைக் கண்டு தொழிலாளர்கள் அச்சத்தில் கூச்சலிட்டு கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள கால் தடத்தை வைத்து புலி என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து ட்ரோன் கேமரா மூலம் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையின் சிறப்பு பிரிவினர் 20 பேர் மூன்று குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த வாரம் புலியின் தாக்குதலில் பெண் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தநிலையில் தற்போது மூணாறில் புலியின் நடமாட்டத்தால் குடியிருப்புவாசிகள் மற்றும் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.