கூடலுார் மலை அடிவாரத்தில் கிடந்த மான் உடல் பாகங்கள்; வனத்துறையினர் விசாரணை
கூடலுார் : தேனி மாவட்டம் கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கிடந்த மான் உடல் பாகங்களை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலுார், குமுளி, கம்பம் மேற்கு வனப்பகுதிகளில் மான்கள் அதிகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த வனச்சரகங்களை ஒட்டி தனியார் விளைநிலங்கள் அதிகம். 18ம் கால்வாய் நீர் வரத்து பகுதியான தொட்டி பாலத்தின் அருகில் மானின் உடல் பாகங்கள் கிடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து கம்பம் மேற்கு வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
மானை வேட்டையாடி இறைச்சியை எடுத்த பின், மீதமுள்ள உடல் பாகங்களை அப்பகுதியில் போட்டு விட்டு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல் பாகங்களை கைப்பற்றிய வனத்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிறுக்தப்பட்டிருந்த டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக கூடலுாரைச் சேர்ந்த 5 பேரை பிடித்து கம்பம் வனத்துறை அலுவலகத்தில் ரகசிய விசாரணை நடத்தினர்.
பல மணி நேரம் விசாரணை செய்தும் மான் வேட்டையாடியவர்கள் குறித்த தகவலை வனத்துறையினர் மாலை வரை தெரிவிக்கவில்லை.