வேலை வாங்கித் தருவதாக ரூ.13.8 லட்சம் மோசடி
தேனி:கம்பம் சுருளிபட்டியை சேர்ந்தவர் ஆனந்தபிரபு. இவரிடம், கம்பத்தை சேர்ந்த அருண்யா மற்றும் மதுரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தப்பணிகளை செய்து வரும் சசிகுமார் ஆகியோர், தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய ஆனந்தபிரபு, ரூ.13.85 லட்சத்தை அருண்யா மற்றும் ஒப்பந்ததாரர் சசிக்குமாரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற சசிக்குமார், தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை கிடைத்தது போன்ற பணி நியமன ஆணையை ஆனந்தபிரபுவிடம் வழங்கினர்.
அதனை பெற்றுக்கொண்டு ஆனந்த பிரபு பணியில் சேர சென்றபோது அது போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து ஆனந்தபிரபு கேட்டதற்கு இருவரும் முறையான பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து, அவர் தேனி போலீஸ் எஸ்.பி. சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் யாழிசை செல்வன் ஆகியோர், அருண்யா, சசிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.