தேனியில் சிறுவர் , சிறுமி கடத்தல் முயற்சியால் பெற்றோர் கவலை போலீசார் அலட்சியத்தால் அதிருப்தி :
தேனி: தேனியில் சிறுவர், சிறுமிகளை கடத்த முயற்சிக்கும் மர்ம நபர்கள் மீது போலீஸ் அலட்சியம் காட்டுவதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். போலீசாரின் அலட்சிய நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேனி கம்போஸ்ட் ஓடைத்தெரு ரயில்வே கேட் கீப்பர் ஜெயசக்கரவர்த்தி. விழுப்புரத்தில் பணிபுரிகிறார். இவரது மகன் விஷ்வா 14. மிரண்டாலைனின் டியூஷன் சென்றார். டியூஷன்முடித்து நவ.24 இரவு 8:00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது டூவீலரில் சென்ற இருவர், ‘உனது அம்மா, அப்பா’அழைத்து வர சொன்னார்கள் எனக்கூறி டூவீலரில் வருமாறு கையை பிடித்து இழுத்து கடத்த முயன்றனர். சுதாரித்த விஷ்வா கையில் இருந்த கூர்மையான ஆணியால் குத்தி தப்பினார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
சிறுமி கடத்தல் முயற்சி
சில நாட்களுக்கு முன் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் பணிபுரியும் அலுவலரின் மகள் 13 வயது சிறுமி தேனி கே.ஆர்.ஆர்., நகர் 3வது தெருவில் நடந்து சென்ற போது, மர்ம நபர்கள் கடத்த முயற்சித்துள்ளனர்.சிறுமி தப்பித்து வீட்டில் சென்று விபரத்தை கூறியுள்ளார்.
சிறுமி தந்தை தேனி போலீசில் புகார் அளிக்க வந்தார். அவரை ஒன்றரை மணி நேரம் போலீசார் காத்திருக்க வைத்தனர். போலீசார் பதிலளிக்காததால் நண்பர் மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியிடம் புகார் அளித்தார். அமைச்சர், டி.ஜி.பி., உத்தரவில் தற்போது சிறுமி கடத்தல் முயற்சி குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார். குழந்தை கடத்தல் முயற்சி குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர். உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.