தபால்காரர்கள் சுழற்சி முறை பணி ஒதுக்கீட்டிற்கு கடும் எதிர்ப்பு
தேனி:சுழற்சி முறையில் பணி ஒதுக்கீட்டிற்கு தபால்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தபால்காரர்கள் பன்முக திறன் ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
தேனியில் நடந்த சங்க கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் கிராமப்புற அஞ்சல்ஊழியர்கள் 15 ஆயிரம் பேர் உள்ளனர். தபால்காரர்கள் மற்றும் பன்முக திறன் ஊழியர்கள் 5 ஆயிரம் என 20ஆயிரம் பேர் பணியில் உள்ளோம்
தற்போது தபால் அலுவலகங்களில் 8 மணி நேரம் பணி நேரமாக உள்ளது. இதனை மாற்றி சுழற்சி முறையில் காலை 6:00 முதல் மதியம் 2:00 மணி, மதியம் 2:00 முதல் இரவு10:00 மணி வரை, இரவு 10:00 முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை என 24 மணி நேரமும் பணியாற்றும் நடைமுறை வந்துள்ளது.
மேலும் ஆண்டிற்கு பண்டிகைகால விடுமுறையாக 18 நாட்கள் வழங்கப்பட்டன.இனி 18 நாட்களிலும் பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டு உள்ளோம். ஆறு நாட்கள் பணி ஒரு நாள்விடுமுறை என ஞாயிறு அன்று கிடைத்த விடுமுறையும் இனி ரத்தாகும். 8 மணி நேரம் பணியாற்றியபின் இரவில் பணியாற்ற வேண்டிய அவசியம் என்ன என்பது எங்களுக்கு புரியவில்லை.
மேலும் ஒருங்கிணைந்த வினியோக மையங்களை அமேசான் உள்ளிட்டகார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து, அந்நிறுவனத்தின் கீழ் எங்களை பணியாற்ற நிர்பந்திப்பது,எதிர்கால பணி பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கம் சார்பில் இத்திட்டத்தை ரத்து செய்து திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுப்பதுடன்,தொடர் போராட்டங்களிலும் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார்.