ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி மனு
தேனி: தேனியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தேனி நகரில் வரும் பிப்.2ம் தேதி தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ எனப்படும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தனியார் தொண்டு நிறுவன அமைப்பினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் தேனி நகர பாஜ தலைவர் ரவிக்குமார் தலைமையில் பாஜகவினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ எனும் நிகழ்ச்சியானது கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும், தேனியில் பிரதான சாலையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே, இந்நிகழ்ச்சி நடத்த அனுமதி தரக்கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.