கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் மீது துணைத்தலைவர், கவுன்சிலர்கள் போர்க் கொடி; நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கலெக்டரிடம் மனு
தேவதானப்பட்டி; கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்விக்கு எதிராக, துணைத் தலைவர் ஞானமணி தலைமையில் கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்துள்ளனர்.
கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு 2022ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க.,- 11, அ.தி.மு.க.,- 3, ம.தி.மு.க.,-1 வெற்றி பெற்றனர்.
இதில் 6 வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி (தி.மு.க.,), தலைவராகவும், 10 வது வார்டு கவுன்சிலர் ஞானமணி( தி.மு.க.,) துணைத்தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆரம்பத்தில் தலைவர், துணைத்தலைவர் இடையே சுமூக உறவு இருந்தது. அதன்பின் பேரூராட்சி கூட்டம் முறையாக நடத்தாதது, வார்டுகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு டெண்டர் விடுவது, கான்ட்ராக்டரை தேர்வு செய்வது உட்பட பல விஷயங்களில் தலைவர், துணைத்தலைவர் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
பெரும்பாலான தி.மு.க., கவுன்சிலர்கள் துணைத்தலைவருக்கு சாதகமாக இருந்தனர். தலைவர், துணைத்தலைவர் இடையே சுமூகமான உறவு இல்லாததால் நிர்வாகத்தில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. இதனால் கடந்த 34 மாதங்களில் 7 செயல் அலுவலர்கள் மாறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.29ல்) துணைத் தலைவர் ஞானமணி தலைமையில் கவுன்சிலர்கள் 7 பேர், கலெக்டரிடம் பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ளனர். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த ஜன.28ல் கெங்குவார்பட்டி பேரூராட்சியில் தங்கத்தமிழ்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சுமூக முடிவு ஏற்பட வில்லை.