அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.65 லட்சம் மோசடி செய்த இருவர் மீது வழக்கு
தேனி, பிப். 1: பெரியகுளத்தில் அங்கன்வாடி மையத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.1. 65 லட்சம் மோசடி செய்த இருவர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பெரியகுளம் நகர் தென்கரை தோட்டி காலனியை சேர்ந்தவர் தங்கபாண்டி(35). இவரது மனைவி நர்சிங் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் பெரியகுளம் நகர் தென்கரை, அக்ரஹாரம் தெருவில் குடியிருக்கும் சத்தியம் என்பவருடன் தங்கப்பாண்டிக்கு நட்பு ஏற்பட்டது.
அப்போது, தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக அங்கன்வாடி மையத்தில் தங்கப்பாண்டியின் மனைவிக்கு வேலை வாங்கித் தருவதாகவும், இதற்கு பணம் செலவாகும் என கூறி ஆண்டிபட்டி அருகே மேக்கிலார்பட்டியை சேர்ந்த இருளன் என்பவரை தங்கப்பாண்டியிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
இதனை நம்பி ரூ.1.65 லட்சத்தை சத்தியம், இருளன் ஆகியோரிடம் தங்கப்பாண்டி கொடுத்துள்ளார். ஆனால் அங்கன்வாடி மையத்தில் வேலைவாங்கித்தராமல் பணத்தை இருவரும் மோசடி செய்தனர். இதுகுறித்து பெரியகுளம் தென்கரை போலீசில் தங்கப்பாண்டி அளித்த புகாரின்பேரில், போலீசார் சத்தியம், இருளன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.