லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் 18ம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு – கலெக்டர், எம்.பி. , தாமதத்தால் விவசாயிகள் விரக்தி
கூடலுார் : லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாயில் பாசனத்திற்கு எம்.பி., தங்கதமிழ்செல்வன் முன்னிலையில், தேனி கலெக்டர் ஷஜீவனா மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.
லோயர்கேம்பில் இருந்து போடி வரையுள்ள 18ம் கால்வாயை நம்பி உத்தமபாளையம், போடி தாலுகாவில் 4615 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் உள்ளன. இது தவிர 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஒவ்வொரு ஆண்டும் அக்.,தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு பெரியாறு அணையில் அக்., நீர் இருப்பு குறைவாக இருந்தது. சமீபத்தில் பெய்த கனமழையால் நீர்மட்டம் உயர்ந்து 130 அடியை எட்டியது. இதனால் 18 ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று (டிச.21) லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலைமதகில் எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில், தேனி கலெக்டர் ஷஜீவனா மதகை இயக்கி ஒரு போக பாசன நிலங்களுக்கு தண்ணீரை திறந்து வைத்தார். இத் தண்ணீர் மூலம் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், சிந்தலைச்சேரி, சங்கராபுரம், மீனாட்சிபுரம், கோடாங்கிபட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி கிராமங்கள் பயன் பெறும். 30 நாட்களுக்கு 98 கன அடி வீதம் 255 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுவதாகவும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன், மஞ்சளாறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் சாலமன், உதவி பொறியாளர்கள் அரவிந்த், பிரேம் ராஜ்குமார், கூடலூர் நகராட்சி கமிஷனர் கோபிநாத் பங்கேற்றனர்