ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம்: கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்
மாவட்டத்தில் வீரபாண்டி முல்லை பெரியாற்றின் தடுப்பணை கரை, சுருளி அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கில் பொது மக்கள் திரண்டனர். சுருளி அருவியில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
தேனி: வீரபாண்டி முல்லைப் பெரியாறு தடுப்பணைக் கரையில் காலை முதல் தர்பணம் கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்திருந்தனர். புரோகிதர்கள் முன்னிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கினர். இதனால் ஆற்றங்கரையில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பலர் முன்னோர்கள் நினைவாக அன்னதானம் வழங்கினர். முன்னதாக கண்ணீஸ்வரமுடையார் கோயில், கவுமாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று, அம்மன், சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் வேலப்பர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி உட்பட பல்வேறு வகை அபிஷேகங்கள், மலர் அலங்காரம் செய்து வழிபட்டனர். வெளியூரில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பலர் மொட்டையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். காவல் தெய்வம் கருப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு பலவகை அபிஷேகங்கள் ஆராதனை செய்து வடைமாலையிட்டு வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள
டி.புதூர் முனீஸ்வரர் கோயில் நடந்த விழாவில் பக்தர்கள் சார்பில் பொங்கலிட்டு, சுவாமிக்கு கிடா வெட்டி பூஜைகள் செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கீழச் சொக்கநாதர் கோயில், அணைக்கரைப்பட்டி அருகே மரக்காமலை முனீஸ்வரர், லாட சன்னாசி கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், நடந்தது.
போடி: பிச்சாங்கரை கீழச் சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போடி அருகே அணைக்கரைப்பட்டியில் மரக்காமலை கோயிலில் சன்னாசிராயர், முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டன.
போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்று சென்றனர்.
கம்பம் சுருளி அருவி: தென் மாவட்டங்களில் சுற்றுலா தலம், ஆன்மிக தலமாக விளங்குவது சுருளி அருவி மட்டுமே. ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கில் பொது மக்கள் வந்து, மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
கடந்தாண்டு ஆடியில் இரண்டு அமாவாசைகள் வந்தன. ஆனால் இந்தாண்டு நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் ஆயிரக்கணக்கில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுருளி அருவியில் குவிந்தனர். கூட்டத்தை பார்த்து, அரசு போக்குவரத்து கழகம் கம்பத்தில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கியது. கார்கள், டூவீலர்கள் அணி வகுத்ததால் சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்க பல இடங்களில் போலீசார் இருந்த போதும், கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் திணறினர். பொது மக்கள் அருவியில் குளித்து விட்டு, ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சிலர் ஆற்றங்கரையில் எள், தண்ணீர் விட்டு முன்னோர்களை வணங்கினர். வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான புரோகிதர்கள் ஆற்றங்கரையில் வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பொது மக்கள் அமர்ந்து தங்களின் மறைந்த தாய், தந்தை, முன்னோர்களின் பெயர்களை கூற, புரோகிதர்கள் மந்திரங்களை ஒதி தர்ப்பணம் செய்தனர். பின்னர் பூதநாராயணர் கோயில், சுருளி வேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
தள்ளு முள்ளு
அருவியில் போதிய அளவு தண்ணீர் விழுந்த போதும், ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால் குளிப்பதற்கு அருவி பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார், வனத்துறையினர் வரிசையில் அனுப்பினர். அதேபோன்று உடை மாற்றும் அறைகள் போதிய அளவு இல்லாததால் பெண்கள் அவதிப்பட்டனர்.
வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்
நூற்றுக்கணக்கில் வாகனங்கள் வந்ததால் நிறுத்துவதற்கு இடமில்லை. ரோட்டின் பக்கவாட்டில் சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அருகில் இருந்த தோட்டங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வனத்துறையும், சுருளிப்பட்டி ஊராட்சியும் பொது மக்களிடம் வசூலிப்பதில் மட்டுமே குறியாக இருந்தன. எந்தவித வசதியும் செய்து கொடுக்கப்படாததால், பொது மக்கள் புலம்பியபடிச் சென்றனர்.