Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்தும் பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை ராமலிங்காபுரத்தில் அடிப்படை வசதியின்றி அவதி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், ஜி.உசிலம்பட்டி ஊராட்சி ராமலிங்காபுரத்தில் இரு கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்தும் பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்வதால் உவர்ப்பு நீரை பயன்படுத்துகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இக்கிராமத்தில் 3000 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்டுள்ள இக்கிராமத்திற்கு இரு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் இருந்தும் அவற்றின் பலன் கிடைக்காமல் நிலத்தடி நீரை அனைத்து தேவைக்கும் பயன்படுத்துகின்றனர்.

கிராமத்தில் தூய்மைப் பணிகள் நடைபெறாததால் தெருக்களில் கழிவுநீர் வடிகால் நிரம்பி வழிகிறது. கழிவுநீரில் உற்பத்தியாகும் புழுக்கள், கொசுக்களால் நோய் தொற்று பரவுவதாகவும், பொதுமக்கள் பிரச்னை குறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. கிராமத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:

கழிவுநீரால் சுகாதாரக்கேடு

துரைக்கண்ணு, ராமலிங்காபுரம்: வண்ணான்குளம் முதல் தொட்டராயர் குளம் வரை ஒரு கி.மீ., தூரம் வடிகால் வசதி உள்ளது. மழைக்காலத்தில் கால்வாய் வழியாக நீர் செல்லும். பல ஆண்டுகளாக கால்வாய் தூர்வாராததால் கால்வாய்க்குள்ளேயே மீண்டும் கழிவுநீர் வடிகால் அமைத்துள்ளனர். அதுவும் பராமரிப்பின்றி கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

தெருக்களில் கழிவுநீர் வாய்கால் சுத்தம் செய்ய பணியாளர்கள் வருவதில்லை. என்றாவது ஒருநாள் சுத்தம் செய்தாலும் அதனை அப்புறப்படுத்தாமல் விட்டு விடுகின்றனர். இதனால் சுகாதாரப் பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது.

குறைவான எண்ணிக்கையில் உள்ள துப்புரவு பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் பணிகள் செய்ய முடியாமல் சுகாதாரம் பாதிக்கிறது. வள்ளல் நதி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கிடைக்காததால், சத்திரப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கிராமத்தை இணைத்தனர்.

திட்டத்தின் கடைசி பகுதியில் உள்ள கிராமத்திற்கு தண்ணீர் கிடைப்பது இல்லை. இதனால் நிலத்தடி நீரை மட்டுமே பயன்படுத்துகிறோம். 40 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் மேல்நிலைத் தொட்டி பழுதடைந்த நிலையில் போதுமானதாகவும் இல்லை. புதிய மேல்நிலைத் தொட்டி கட்டும் நடவடிக்கையும் இல்லை. தமிழக முதல்வர் வீடு கட்டும் திட்டத்தில் ராமலிங்கபுரத்தில் மூன்று வீடுகளுக்கு மட்டுமே அனுமதித்து கிராமத்தை புறக்கணித்துள்ளனர். இதே ஊராட்சியில் உள்ள ஜி. உசிலம்பட்டிக்கு 13 வீடுகள் அனுமதித்துள்ளனர்.

பராமரிப்பு இல்லாத சமுதாயக்கூடம்

தாமோதரன்: ஜல் ஜீவன் திட்டத்தில் கிராமத்தில் 60 வீடுகளுக்கு இன்னும் இணைப்பு கிடைக்கவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட குழாய்கள் பல இடங்களில் கழிவுநீர் சாக்கடைக்குள் செல்கிறது. இதனை மாற்றி அமைக்க மறுக்கின்றனர்.

வாரம் ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை கூட்டுக் குடிநீர் கிடைக்கிறது. குடிநீருடன் கிராமத்தில் போர்வெல் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரையும் கலந்து விடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், இருமல், வயிற்று வலி, வாந்தி பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது.

ஜி.உசிலம்பட்டி மந்தை குளத்தில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய் பராமரிப்பு இல்லாததால் ராமலிங்கபுரம் கிழக்கு பகுதி குளம் வறண்டு கிடக்கிறது. நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார வேண்டும். சமுதாயக் கூட்டத்தில் குடிநீர், மின்சார வசதி இல்லை. பராமரிப்பின்றி மேற்கூரை பெயர்ந்து வருவதால் பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கிராமத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள தொட்டராயர்  குளம் புதர்மண்டி உள்ளது. இதனை சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *