குப்பைக் கிடங்காக மாறும் நெடுஞ்சாலை ஓரங்கள்
தேனி நகர் பகுதியை சுற்றி உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் ரோட்டோர இடங்கள் குப்பை கிடங்காக மாறும் முன் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தனுஷ்கோடி – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோட்டின் ஓரத்தில் சில சமூக விரோதிகள் குப்பையை தினமும் கொட்டுவது வாடிக்கையாக உள்ளது.
அதே போல் கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் முதல் அன்னஞ்சி விலக்கு வரை உள்ள மாநில நெடுஞ்சாலையில் பல இடங்களில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவற்றில் இருந்து வரும் துர்நாற்றம் அவ்வழியாக செல்வோரை முகம் சுளிக்க வைக்கிறது.
குப்பையை ரோட்டின் ஓரங்களில் கொட்டாமல் இருக்க பொது மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.