மதுரை – போடி அகல ரயில் பாதையில் மின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்; விரைவில் மின் ரயில் இயக்க முடிவு
போடி: மதுரை- – போடி அகல ரயில் பாதை மின் மயமாக்கம் பணி நிறைவு பெற்ற நிலையில் ரயில்வே லைன் மீது செல்லும் மின் இணைப்பில் உள்ள மின் கம்பிகள், உபகரணங்களில் குறைபாடுகளை கண்டறிய, ‘எலக்ட்ரிக் லோகோ மோட்டிவ்’ மின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
இந்த ரயில் பாதை 25 ஆயிரம் வோல்ட் மின் பாதையாக மாற்றப்பட்ட நிலையில் 4 மாதங்களுக்கு முன் 120 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. நான்கு நாட்களுக்கு முன் மதுரை – -போடி ரயில் வழித்தடம் மீது செல்லும் மின் இணைப்பு கம்பிகள் சீராக உள்ளதா என அறியவும், உபகரணங்களில் குறைபாடுகள், சீரான மின்சாரம் வழங்கும் வகையில் பேன்டோகிராப் கொண்டு மின் இணைப்பு பொருத்தப்பட்ட ஓவர் ஹெட் எக்யூப்மென்ட் இன்ஸ்பெக் ஷன் கார் (OHE INSPECTION CAR) ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
துணை தலைமை மின் பொறியாளர் தாமரைச்செல்வன், நிர்வாக மின் பொறியாளர் முத்துக்குமார் முன்னிலையில் மதுரை – போடி இடையே 75 கி.மீ., வேகத்தில் எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. வரும் வாரத்திற்குள் மின்ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்டவாளங்களை கடக்கும் போது உயரம் அதிகமான இரும்பு கம்பிகள், மரக்கிளைகளை வெட்ட பயன்படும் அரிவாள், குடையை உயர்த்தி கொண்டு செல்லாதபடி ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.