வரி வசூலில் கண்டிப்பு; பொதுமக்கள் அதிருப்தி
கம்பம் : வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்புக்களை துண்டிக்கும் பணியால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகள் வரி வருவாயை நம்பியே உள்ளன. அரசின் மானியம் கிடைத்தாலும் வரி வருவாய் தான் பிரதானமாகும். மார்ச் ஆரம்பத்தில் துவங்கி மாத இறுதிக்குள் வரி வசூலை முடிப்பார்கள்.ஆனால் இந்தாண்டு கடந்த டிசம்பரில் வரி வசூலை துவக்கி விட்டனர். அலுவலகத்தில் உள்ள அனைவரும் குழுக்களாக பிரிந்து சென்று வரி வசூலை மேற்கொண்டனர்.
பல வீடுகள் மற்றும் கடைகளில் வழக்கம் போல வரி நிலுவை வைத்துள்ளனர். வேறு வழியின்றி குடிநீர் இணைப்புக்களை துண்டிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பம் நகராட்சியில் அதிகாரிகள் குழு நேற்று காலை சுக்காங்கப்பட்டி வீதியில் சொத்து வரி செலுத்தாத வீட்டில் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.
ஓடைப்பட்டி அருகே பெண் ஒருவர் பேரூராட்சி அலுவலர்கள் மீது வரி கேட்டு வந்த அலுவலர்கள் தன்னை அவதூறாக பேசியதாக போலீசில் புகார் செய்துள்ளார். அதிகாரிகளின் இந்த வரி வசூல் வேகம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது