சுருளி ஆற்றை துார்வார நீர்வளத்துறை , வனத்துறை அலட்சியம்
கம்பம்: ‘கம்பம் சுருளியாற்றை துார்வாருவது யார்’ என்ற பிரச்னையில் நீர்வளத்துறையினரும், வனத்துறையினரும், தங்களுக்குள் ‘நீயா.. நானா’ எனப் போட்டியிட்டு பொது மக்கள், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைகளை தட்டிக் கழிப்பதால் அருவிக்கு தர்ப்பணம் அளிக்க வந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், சுருளி ஆறு தான் கம்பம் பள்ளத்தாக்கின் பாசனம், குடிநீருக்கு பயன்பட்டு வந்தது. மேகமலைப் பகுதியில் இருந்து உருவாகும் சுருளியாறு தற்போதுள்ள அருவி வழியாகவும், வண்ணாத்தி பாறை வழியாகவும் வருகிறது. இந்த ஆற்றின் தண்ணீரை வைத்து தான் சுருளியாறு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டது.
இன்றைக்கும் ஆண்டு முழுவதும் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரே மின் நிலையமாக இம்மின்நிலையம் உள்ளது. சுருளி அருவியில் இருந்து ஆரம்பமாகும் இந்த ஆறு துவக்கத்திலேயே செடி, கொடிகள் வளர்ந்து, ஆறு இருக்கும் இடம் தெரியாமல் உருமாறி வருகிறது. மேலும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், வெள்ள நீர் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ஆறு புதர் மண்டி அதன் வழித்தடம் செடி, கொடிகளால் நிரம்பியுள்ளன. தர்ப்பணம் கொடுக்க வரும் பொது மக்கள் வீசும், ஆடைகளும் பொருட்களும் ஆற்றில் நிரம்பி, அசுத்தமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு தினமும் அருவியில் நீராட வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.
‘சுருளியாற்றை துார் வாருவது எங்கள் வேலையல்ல’ என்று வனத்துறை கூறுகிறது. நீர்வளத்துறையோ துார்வார சென்றால், ‘வனத்துறையினர் ஆயிரம் கேள்வி கேட்பார்கள்’ எனக் கூறி, இரண்டு துறை அதிகாரிகளும் பொறுப்பை தட்டிக் கழிக்கின்றனர். யாருடைய அதிகாரத்தின் கீழ் சுருளியாறு வருகிறது என்பதே தெரியாத நிலை உள்ளது. ஆண்டுதோறும் இங்கு சாரல் விழா 5 நாட்கள் நடத்தப்படுகிறது. சுற்றுலா தலம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் சுருளியாற்றின்நிலையோ பரிதாபமாக உள்ளது. கலெக்டர் ஷஜீவனா நீர்வழித்தடத்தில் புதர் மண்டியுள்ள மாவட்டத்தின் அடையாளமாக திகழும் சுருளியாற்றை துார்வாரி, காப்பாற்ற நடவடிக்கை எடுக்க உரிய துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரியுள்ளனர்.