பத்து மாதங்களுக்கு பிறகு பாதிக்குப் பாதியாக குறைந்த காய்கறி விலை
பெரியகுளம்: பெரியகுளம் தாலுகா பகுதிகளில் காய்கறிகள் விலை 10 மாதங்களுக்கு பிறகு பாதிக்குப் பாதி குறைந்துள்ளது.
இப்பகுதியில் நேற்று நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, கிரஹப்பிரவேசம், காதணி விழா உட்பட நுாற்றுக்கணக்கான சுப நிகழ்ச்சிகள் நடந்தன. முகூர்த்த நாட்களில் காய்கறிகள் தேவை அதிகரிப்பால் விலை அதிகமாக இருக்கும். இதற்கு மாறாக பருவ மழையால் காய்கறிகள் விளைச்சல் அதிகம். இதனால் அனைத்து காய்கறிகள் விலை குறைவாக இருந்தது. கடந்த 10 மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கு விற்றது. தற்போது ரூ.12 ஆக விலை குறைந்துள்ளது. கிலோ ரூ.120 க்கு விற்ற பீன்ஸ் ரூ.60 என, குறைந்துள்ளது. கிலோ ரூ.60 க்கு விற்ற கத்தரிக்காய் தற்போது கிலோ ரூ.25 எனவும், ரூ.80 க்கு விற்ற அவரைக்காய் ரூ.60 எனவும், ரூ.100 க்கு விற்பனையான கேரட் ரூ.60, ரூ.60 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.30 என, பாதிக்கு பாதியாக விலை குறைந்துள்ளது.
மேலும் ரூ.40 க்கு விற்ற கொத்தவரை ரூ.25 எனவும், ரூ.80 க்கு விற்ற பெல்லாரி வெங்காயம், சின்வெங்காயம், தற்போது கிலோ ரூ.50 என, பாதியாக குறைந்து விற்பனையானது. நேற்று ஒரு நாளில் மட்டும் பல்வேறு விசேஷங்களுக்கு பெரியகுளம் பகுதியில் 10 டன் காய்கறிகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.