நீர் வளத்துறை தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
பெரியகுளம்: நீர்வளத்துறை, கட்டுமானம் பிரிவுகளில் 25 ஆண்டுள் தற்காலிக பணியாளர்கள் உள்ள ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம் மஞ்சளாறு வடிநில கோட்டம் நீர் வளத்துறை, கட்டுமானப்பிரிவுகளில் 40 பேர் 25 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். குளங்கள், அணைகள், பராமரிப்பு மின்கம்பியாளர், டிரைவர், நீதிபதிகள் குடியிருப்பு,செயற்பொறியாளர் இல்லம், விருந்தினர் இல்லங்கள் உட்பட பராமரிப்பு பணிகள், கட்டுமானப் பிரிவுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் 22 வயதில் பணியில் சேர்ந்து தற்போது ஓய்வு பெறும் வயதை நெருங்கி உள்ளனர்.
பணி நிரந்தரம் இன்றி குறைந்த சம்பளம் பெறுகின்றனர். கடந்த வாரம் எவ்வித பணப்பலனும் இல்லாமல் 5 பேர் ஓய்வு பெற்றனர்.
பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றினால் பணி வரன்முறை செய்யவேண்டும். இதனடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன் கோப்புகள் தயாரானது. ஆனால் அந்த கோப்புகள் மீது தற்போது வரை நடவடிக்கை இல்லை. பணியாளர்கள் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு ஆகியோர் எதிர்கட்சியாக இருந்தபோது இவர்களை பணி நிரந்தரம் செய்ய குரல் கொடுத்தனர்.
தற்போது இருவரும் துறை அமைச்சர்களாக உள்ளனர். ஆனால் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. சட்டசபையில் பட்ஜெட் தொடரில் நிரந்தரம் செய்ய வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.-