சுருளி அருவிக்குள் தார் ரோடு அமைக்க அனுமதியின்றி சுற்றுலா பயணிகள் அவதி
கம்பம்; சுருளி அருவி பகுதிக்குள் தார்ரோடு அமைக்க அனுமதி இல்லாததால் அருவிக்கு வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுருளி அருவியில் குளிப்பதற்கு தினமும் திரளான பொதுமக்கள் வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விடுமுறை, விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வருகின்றனர். நுழைவு கட்டணம் பெறும் இடத்திலிருந்து அருவிக்கு செல்ல ஒரு கி.மீ. தூரம் நடக்க வேண்டும். இந்த ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் முதியோர், குழந்தைகள், நோயாளிகளும் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையுடன் எழுந்த மோதலுக்கு பிறகு ரோடு புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளவில்லை.
அருவிக்கு செல்ல இயக்கப்பட்ட பேட்டரி கார், வேன் இயக்க முடியாததால் நிறுத்தி வைத்துள்ளனர். தற்போது அருவி வரை ஒரு கி.மீ. தூர ரோட்டை புதுப்பிக்காமல் அவ்வப்போது தற்காலி சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து வனத்துறையில் விசாரித்த போது, புலிகள் காப்பகம் என்பதால் தார் ரோடு அமைக்க அனுமதி இல்லை. சிமென்ட் ரோடு அமைக்கலாம். அதுவும் டிராக் மாதிரி இருக்க வேண்டும், ரோடு அமைக்க அனுமதி வேண்டி தேசிய புலிகள் பாதுகாப்பு முகமைக்கு விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்தால் சிமென்ட் ரோடு அமைக்க முடியும். பேட்டரி கார், வேன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.