சபரிமலை மாசி மாத பூஜைகளுக்காக நடை நாளை திறப்பு
சபரிமலை : மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. பிப்.17 -வரை பூஜைகள் நடைபெறும்
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து கடந்த ஜன., 20 காலை நடை அடைக்கப்பட்ட நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது. 5:00 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து 18 படிகள் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வேறு விசேஷ பூஜைகள் கிடையாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார்.
தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். பிப். 13 முதல் 17 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடக்கும். எல்லா நாட்களிலும் மதியம் உச்ச பூஜைக்கு முன் களபாபிஷேகம் நடைபெறும். பிப். 17 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இந்த நாட்களில் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. சிறிய வாகனங்களில் வருவோருக்கு பம்பையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.