சங்கராபுரம் ஊராட்சி மக்கள் புலம்பல் சுகாதார வளாகம் ஏழு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி பயன்பாட்டிற்கு வராத அவலம்
போடி: சங்கராபுரம் ஊராட்சியில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டி முடித்து ஏழு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத அவல நிலை நீடிக்கிறது. அடிப்படை வசதி இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சின்னமனூர் ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி 2 வது வார்டில் கீழப்பட்டி மேற்கு தெரு, கிழக்கு மந்தைகுளம் தெரு, அழகர்சாமி கோயில் தெரு, நடுத்தெரு, கிழக்கு தெருக்கள் அடங்கி உள்ளன. 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
பெரும்பாலான தெருக்களில் ரோட்டின் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. மின்கம்பம் இருந்தும் தெரு விளக்குகள் எரியாததால் கிராமமே இரவில் இருளில் மூழ்கி உள்ளன. கழிவுநீர் செல்லாததால் வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது.
தேங்கிய கழிவு நீரால் துர்நாற்றம் வீசி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஊரின் நடுவே குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
பொதுமக்கள் கருத்து;
கழிவுநீரால் சுகாதாரக்கேடு
செல்வி, சங்கராபுரம்: பழைய தண்ணீர் தொட்டி அருகே உள்ள ஓடையில் தடுப்புச்சுவர், பாலம் வசதி இல்லாததால் சாக்கடை கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்குகிறது. இதில் பாலிதீன் குப்பை அதிகளவில் தேங்கியுள்ளதால் மழை நீர் செல்ல வழி இன்றி குளம் போல் தேங்கி மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து பெரும் தொந்தரவு ஏற்படுவதுடன் சுகாதார கேடு ஏற்படுகிறது. சாக்கடை பாலம், தடுப்புச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குண்டும், குழியுமான ரோடு
கே.மூக்கன், சங்கராபுரம்: 2வது வார்டு கீழப்பட்டி மேற்கு தெருவில் ரோடு அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேலானதால் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
ரூ.5 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது.
கீழப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவில் மின் கம்பம் இருந்தும் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இருளில் முழ்கி உள்ளது. புதிதாக ரோடு, தெரு விளக்கு வசதி செய்திட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமற்ற ரோடால் மக்கள் அவதி
வி.கணேசன், சங்கராபுரம்: சங்கராபுரம் மெயின் ரோட்டில் இருந்து பழைய தண்ணீர் தொட்டி வரை முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக ரோடு போடப்பட்டது.
தரமற்ற முறையில் ரோடு அமைத்ததால் வாகனங்கள் செல்லும் போது பக்கவாட்டு கற்கள் முழுவதும் பெயர்ந்து சேதம் அடைந்து வருகின்றன.
கிழக்கு மந்தை குளம் ஓடையில் மழைநீர் கழிவு செல்ல வழி இன்றி பாதை ஆக்கிரமிப்பில் உள்ளது.
குப்பைகள் கொட்டி வருவதால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்படுகிறது.
ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, தரமில்லாத ரோட்டை சீரமைத்திட சின்னமனூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.