குடிநீர் குழாய்களை அகமலை அருகே வனத்துறை சேதப்படுத்தியதாக புகார் பழங்குடியினர் கலெக்டரிடம் மனு
தேனி: அகமலை அருகே கரும்பாறை பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கான குடிநீர் வினியோக பகிர்மானகுழாய்களை வனத்துறையினர் வெட்டி சேதப்படுத்தியதால் குடிநீர் கிடைக்கவில்லை கிராம மக்கள் கலெக்டர் ஷஜீவனாவிடம் புகார் அளித்தனர்.
மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமிமுன்னிலை வகித்தார். அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் அகமலை கரும்பாறை பழங்குடியினர் பாப்பையா, அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுடன் வழங்கிய மனுவில், பிப்.5ல் தேனி வன அதிகாரிஅலைபேசியில் அழைத்து, கரும்பாறைக்கு மேல் பகுதியில் தீப்பிடித்துள்ளது.
அதனை அணைத்துவிட்டு, அதனைவீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதன்படி வனத்துறையினர் கூறியமுத்துகிருஷ்ணன் என்பவரை அழைத்து அப்பகுதியில் எரியும் தீயை அணைக்க சென்றோம். அணைக்கமுடியவில்லை.
இதனால் வீடியோ எடுத்து அவருக்கு முத்துகிருஷ்ணன் அனுப்பினார். ஆனால் அந்த வீடியோ அனுப்பிய பின், எங்களை அழைத்து தேனி ரேஞ்சர் அலுவலகத்தில் 4 மணி நேரம் விசாரணை நடத்தி மிரட்டுகின்றனர்.
மறுநாள் வனத்துறையினர் தம்பிராண்காணல் பகுதியில் இருந்து கரும்பாறை வரை நபார்டு வங்கி உதவியால் மாவட்ட நிர்வாகம் அமைத்துக் கொடுத்த குடிநீர் பகிர்மான குழாயை வெட்டி குடிநீர் வினியோகத்தை நிறுத்தினர்.
இதனால் தேனி வனத்துறை அதிகாரிகள் மீது, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளனர்.
தேனி சமூக ஆர்வலர் ராஜதுரை மனுவில், தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள பஞ்சமி நிலங்களைமீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் போலி ஆவணங்கள் தயாரித்து பஞ்சமி நிலங்களைவிற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவாஜி நகர் ரோட்டில் உள்ள மதுபாரை இடமாற்றம்செய்ய வேண்டும். அப்பகுதியில் உள்ள குண்டும் குழியுமான ரோட்டில் விபத்து ஆபாயம் உள்ளது. ரோட்டை சீரமைக்கவேண்டும் என கோரினார்.