கடமலை -மயிலை ஒன்றியத்தில் கண்மாய்கள் தூர்வாரப்படுமா?
வருசநாடு, பிப். 11: கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 543 ஏக்கர் பரப்பளவில் சாந்தநேரி, பெரியகுளம் செங்குளம் உள்ளிட்ட 10 கண்மாய்கள் உள்ளன. இதில் ஓட்டணை, பெரியகுளம், சிறுகுளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. பிற கண்மாய்களுக்கு மேகமலை அருவி, ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.
இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களுக்கான வரத்து வாய்க்கால்களில் செடிகள், கொடிகள் படர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் மூல வைகை ஆறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டாலும் கண் மாய்களுக்கு தண்ணீர் முழுமையாக போய் சேருவதில்லை. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.