ரேஷன் கடைகளில் தராசுடன் பி.ஓ.எஸ்., மிஷின் இணைப்பு: பொருட்கள் எடை குறையாமல் வழங்க நடவடிக்கை
தேனி: மாவட்டத்தில் முதன்முறையாக போடி தாலுகாவில் 3 ரேஷன் கடைகளில் விற்பனை முனைய கருவி (பி.ஓ.எஸ்., மிஷின்) தராசு இணைக்கப்பட்டுள்ளது. இதில் எலக்ட்ரானிக் தராசில் எடையிட்ட பின்னர் தான் பில் வழங்கப்படும். அதனால் அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எடை குறைவின்றி வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் 80 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட மொத்தம் 117 கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. இச்சங்கங்களின் கட்டுப்பாட்டில் 513 ரேஷன் கடைகள், மகளிர் குழுக்கள் மூலம் 29 கடைகள் என மொத்தம் 542 கடைகள் செயல்படுகின்றன. இதில் 431 முழுநேர கடைகளாகவும், 111 பகுதி நேர கடைகளாகவும் இயங்குகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 4.32 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரிசி, சீனி, பாமாயில், பருப்பு, கோதுமை உள்ளிட்டவை ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.
ரேஷன் கடைகளில் பதிவேட்டில் வரவு வைத்து பொருடகள் வழங்கப்பட்டு வந்தது. பத்தாண்டுகளுக்கு முன் பி.ஓ.எஸ்.,(விற்பனை முனையம்) கருவி அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து கார்டுதாரர்களில் விரல் பதிவு, கருவிழி பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
எந்த முறையில் பொருட்கள் வழங்கினாலும் அரிசி, சீனி, பருப்பு போன்றவை எடை குறைத்து வழங்குவதாக புகார் தொடர்ந்தது. இதுபற்றி கேட்டால் ‘கடையில் பணிபுரிபவர்களோ எங்களுக்கே குறைத்து தான் அனுப்புகின்றனர்’ என்கின்றனர்.
இப்பிரச்னைகளை தீர்க்க தராசில் எவ்வளவு எடை அளவீடு செய்யப்படுகிறதோ அந்த அளவு பி.ஓ.எஸ்., கருவியில் பதிவு செய்து பில் வழங்கும் புதிய முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக பி.ஓ.எஸ்., மிஷினில் செயலி பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த செயலியுடன் இணைக்கப்பட்டுள்ள ‘புளுடூத்’தராசில் பொருத்தப்படும். சோதனை முறையாக மாவட்டத்தில் போடி நகர்பகுதியில் 3 ரேஷன் கடைகளில் இந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொருட்கள் எடை குறைத்து வழங்குவது தவிர்க்கப்படும். விரைவில் மற்ற கடைகளுக்கும் இத் திட்டம் என கூட்டுறவுத்துறை கூறுகின்றனர்.
கிட ப்பில் போட்டு விடாதீர்கள்
இதே போல் சில்லரை பிரச்னையை தீர்க்க கியூ.ஆர்., கோடு மூலம் பணம் செலுத்தும் முறை மாவட்டத்தில் 8 கடைகளில் நடைமுறைக்கு வந்தது. ஆனால் மற்ற கடைகளுக்கு விரிவு படுத்தவில்லை.
அதே போல் இந்த திட்டத்தையும் சோதனை முறையை மட்டும் தொடராமல் மாவட்டம் முழுவதும் நடைமுறைத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.