வெற்றியை நிர்ணயிக்கும் அளவிற்கு த.வெ.க.,விற்கு ஓட்டு வங்கி இல்லை சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி
தேனி: ”வெற்றியை நிர்ணயிக்கும் அளவிற்கு த.வெ.க.,விற்கு ரசிகர்கள் ஓட்டு வங்கி இல்லை’ என அமைச்சர் பெரியசாமி கூறினார்
தேனியில் விளையாட்டு மைதானங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் கூறிதாவது:
ஈரோடு இடைத்தேர்தலில் நிற்காமல் அ.தி.மு.க., ஒதுங்கி கொண்டது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம் என்ற நிலையில் அ.தி.மு.க., இனி இருக்க வாய்ப்பில்லை.
2026 சட்டசபை தேர்தலிலும் ஸ்டாலின் தான் முதல்வராக வருவார். அவர் தொடர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. எந்த கட்சியை பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. தமிழகத்தில் தி.மு.க.,வை தவிர எந்த கட்சிக்கும் இடமில்லை.
பிரசாந்த் கிஷோர் த.வெ.க., உடன் இணைந்துள்ளதால் தி.மு.க., வெற்றி பாதிக்காது. அவர் வந்ததால் மட்டும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
கடந்த தேர்தலில் தி.மு.க., மீது நம்பிக்கை வைத்து மக்கள் ஓட்டளித்தனர். ஈரோடு இடைத்தேர்தலில் 75 சதவீத ஓட்டுக்களுக்கு மேல் பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ளது.
விஜய் ஒரு சினிமா நடிகர், அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். மக்கள் தற்போது சினிமாவை அரசியலோடு கலப்பதில்லை. எனவே இளைஞர்கள், படித்தவர்கள் த.வெ.க.,விற்கு ஓட்டளிக்க தயாராக இல்லை.
வெற்றியை நிர்ணயிக்கும் அளவிற்கு அவரது ரசிகர்கள் ஓட்டு வங்கி இல்லை. சட்டசபை தேர்தலில் 4 அல்லது 5முனை போட்டி ஏற்படும். இதில் தி.மு.க., மட்டும் 75 சதவீதம் வாங்கினால் மற்ற கட்சிகள் டிபாசிட் இழக்கும் என்றார்.