கடமலைக்குண்டு அருகே அச்சுறுத்தும் யானைகள்
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மலைப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது
தென்னந்தோப்புகளில் யானைகள் அடிக்கடி புகுந்து மரங்களை சேதப்படுத்துகிறது. கடந்த சில மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட தென்னை, இலவ மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் மேலப்பட்டி அருகே பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் காட்டு யானைகள் 100க்கும் மேற்பட்ட மரங்களை சேதப்படுத்தியுள்ளது. அப்பகுதியில் இருந்த விவசாயிகளையும் யானைகள் துரத்தி உள்ளது.
காய்க்கும் பருவத்தில் இருந்த தென்னை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானைகள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினரை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது: கடமலைக்குண்டு அருகே விவசாய நிலங்களுக்கு காட்டு யானைகள் வந்து செல்வதை கட்டுப்படுத்தும் விதமாக வனப்பகுதியை ஒட்டி 5 கி.மீ., தூரத்திற்கு அகழி அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகளும் நடந்து வருகிறது. அகழி அமைந்தால் யானைகள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும் என்றனர்.