Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

பொதுமக்கள், அலுவலர்கள் எந்த நேரமும் சந்திக்கலாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி; தேனி மாவட்டத்தின் 19வது கலெக்டராக ரஞ்ஜீத்சிங் 33, நேற்று பொறுப்பேற்றார்.

கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரபிரதேசம் கான்பூரை சேர்ந்தவர். இவர் 2016 தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். பொறுப்பேற்ற பின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதில் உள்ள இடைவெளிகள் சரி செய்ய கவனம் செலுத்தப்படும்.

அரசு செயலாளர்களை சந்தித்தபோது வனப்பகுதிகள், அண்டை மாநிலம் தொடர்பான நிகழ்வுகள் கவனிக்க வேண்டி இருக்கும் என்றனர். பழங்குடியினர் அதிகம் உள்ளனர். அவர்களின் மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ளது. அதற்கு முன் அரசு திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடையும் வகையில் நடவடிக்கை இருக்கும். தேர்தல் முன்னேற்பாடு பணிகள் சரியாக பார்க்கப்படும். இந்த மாவட்டத்தில் ஊரக பகுதிகளின் வளர்ச்சி முக்கியம் ஆகும். இதற்கு முன் நாகப்பட்டினத்தில் கூடுதல் கலெக்டராக பணிபுரிந்த அனுபவம் உள்ளது. அந்த துறை மூலம் ஊரக பகுதிகளில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். பொதுமக்களை சந்தித்து பிரச்னைகளை கேட்பேன். பொதுமக்கள், அலுவலர்கள் எந்த நேரமும் என்னை சந்திக்கலாம் என்றார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் அரசுத்துறை அலுவலகங்களுக்கு சென்று பார்வையிட்டார். இவர் இதற்கு முன் சேலம் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *