இளம் வயதினர் தற்கொலையை தடுக்க விழிப்புணர்வு திட்டம்: மாவட்ட மனநல மருத்துவர் தகவல்
தேனி; மாவட்டத்தில் 18 முதல் 20 வயதுடைய இளம் வயது ஆண், பெண்கள் தற்கொலைகளை தவிர்க்க,மனநல வியாழன்’ திட்ட விழிப்புணர்வுடன் கூடிய சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.’ என,மாவட்ட மன நல டாக்டர் கோரா.ராஜேஷ் தெரிவித்தா
பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மனநல மருத்துவ சிகிச்சை மையம் இயங்குகிறது.இங்கு 50 படுக்கை வசதிகள் கொண்ட மனநல மறுவாழ்வு சிகிச்சை மையமும், உடனடி சிகிச்சை பெறுவதற்கான 10 படுக்கைகள் கொண்ட வார்டும் இயங்குகிறது. மாவட்ட மன நல அலுவலராக டாக்டர் கோரா ராஜேஷ்தலைமையில் 7 மனநல நிபுணர்கள், 5 நர்ஸ்கள், களப்பணிக் குழுவினர் இயங்கி வருகின்றனர். 2023 ஜன.1 முதல் தற்போது வரை மனநல மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் 228 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 146 பேர் குணமடைந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். 42 பேர் வீட்டிற்குசென்றுள்ளனர். குணமடைந்து உறவினர் விருப்பம் தெரிவிக்காத நிலையில் மறுவாழ்வு மையத்திற்கு சென்றவர்கள் 11 பேர், வார்டில் 29 பேர் தற்போது சிகிச்சை பெறுகின்றனர்.
தினமலர் நாளிதழின், அன்புடன் அதிகாரி’ பகுதிக்காக மாவட்ட மன நல அலுவலர் பேசியதாவது:
இளம் வயதினர் தற்கொலை அதிகரிக்க காரணம் என்ன
நமக்கு இறைவன் கொடுப்பது இயற்கை மரணம். ஆனால் மாநிலத்திலேயே நமக்கு நாமே மரணத்தை கொடுக்கும் தற்கொலைகள் செய்து கொள்வதில் தேனி மாவட்டம் 5 வது இடத்தில் உள்ளது. கடந்த 2024 அக்டோபரில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்து சிகிச்சை பெற்று இறந்தவர்கள் 10 பேர், நவம்பரில் 11, டிசம்பரில் 11, ஜனவரியில் 15 பேர் என கடந்த 4 மாதங்களில் 47 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதுவே விஷம் குடித்து 4 மாதங்களில் 54 பேரும், நீர்நிலைகளில் தற்கொலை செய்வதற்வர்கள் 14 பேர், தீக்குளித்து 9 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மன அழுத்தம் உயர்ந்து அதிகபட்சமாக 54 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளதுள்ளனர். இதில் தற்கொலை முடிவு எடுத்து இறந்ததில் பெண்களின் சதவீதம் அதிகம். இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தி தற்கொலைகளை தடுக்க வேண்டிய கட்டாயத்தில்மாவட்ட நிர்வாகம் பிற துறைகளுடன் இணைந்து செயலாற்றுவது கட்டாய தேவை உள்ளது
சமீபகாலமாக குடும்ப நடைமுறையில் விட்டுக்கொடுத்தல் பண்பு’ இல்லாமல் உள்ள இளம் வயதினரை அதிகளவில் பார்த்து வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் போதை பழக்கம் அதிகரிப்பு, எதிர்பாலின ஈர்ப்பு மூலம் காதல் வயப்படுவது, அது இருவீட்டார் மத்தியில் ஏற்கப்படாமல் இருப்பது, பொருளாதார நெருக்கடி, பணிச்சூழல், பணிச்சுமை, தற்போது உள்ள பொறியியல், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு வித மன அழுத்தம் தற்கொலைகளுக்கு துாண்டப்படும் காரணங்களாக உள்ளன. மிக முக்கியமாக ஆண்கள் தற்கொலை முடிவு எடுத்து இறப்பு ஏற்படும் சதவீதத்தை காட்டிலும், பெண்கள் அதிகளவில் தற்கொலை அதிகரித்துள்ளது. இதற்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தற்கொலை முயற்சியில் தற்காத்து கொள்வது எப்படி
மனநல வியாழன்’ எனும் திட்டத்தில் விழிப்புணர்வுடன் கூடிய சிகிச்சைகளை வழங்கி வருகிறோம்.
இதற்காக தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் விபரங்களை பெற்று, அப்பகுதியில் நேரில் சென்று அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இத்திட்டத்தின் சிகிச்சை முகாம்கள் வாரந்தோறும் நடத்தப்படுகின்றன. தற்போது மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற நகர்நல நலவாழ்வு மையங்களில் வியாழன் தோறும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இங்கு வருபவர்களுக்கு பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகிறோம். இதனை பொது மக்கள்பயன்படுத்தி கொள்ள வேண்டும்.போதை பழக்கத்தால் மன நலம்
பாதிக்குமா
கட்டாயமாக மூளையின் செயல்பாடுகள் பாதிக்கும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். இதனை தடுக்க டாக்டர் ரசீது இன்றி மருந்து மாத்திரைகள் வழங்கும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் போதை தரும் மருந்தை ஊசி மூலம் ஏற்றிக்கொண்டு கல்லுாரி மாணவர்கள் அதிக நேர போதைக்கு அடிமையாகி, உடல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர்.
மேலும் போதை காளான் (மேஜிக் மஸ்ரூம்) வாங்கி பயன்படுத்தும் நபர்களுக்கு அதீத பாதிப்பும், அதிக நேர போதை தருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
போதையால் மூளையின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கும். இதனால் போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க திட்டமிடப்பட்டு, பொது சுகாதாரத்துறை, மாவட்ட மன நல சிகிச்சைத்துறை, போலீசார் இணைந்து விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.