Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

படையப்பா யானை தாக்கி பெண் காயம்

மூணாறு: மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் வாகுவாரை எஸ்டேட் பகுதியில் படையப்பா யானை தாக்கி திருச்சூரைச் சேர்ந்த பெண் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

கேரளா, திருச்சூர் மாவட்டம் ஆம்பலூர், அழகப்பா நகரைச் சேர்ந்த பில்ஜா 39, மேக்கப் தொழில் செய்து வருகிறார்.

அவர், மூணாறு அருகே மறையூரில் தனியார் பள்ளியின் நேற்று நடந்த வெள்ளி விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு மேக்கப் போடுவதற்கு தனது மகன் பினிலுடன் 19, டூவீலரில் வந்தார்.

மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் வாகுவாரை எஸ்டேட் பாக்டரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு சென்றபோது படையப்பா ஆண் காட்டு யானை நின்றதை பார்த்த அச்சத்தில் நிலை தவறி இருவரும் ரோட்டில் விழுந்தனர். கீழே விழுந்து கிடந்த பில்ஜாவை தந்தங்களால் படையப்பா குத்தியபோதும், அவர் முதுகில் அணிந்திருந்த பையில் குத்து விழுந்ததால் தப்பினார். எனினும் படையப்பா தூக்கி வீசியதால் பலத்த காயமடைந்தார். அப்பகுதி தொழிலாளர்கள் படையப்பாவை விரட்டி விட்டு பில்ஜாவை மீட்டு மறையூரில் தனியார் மருத்துவமனையில் அனுமத்தனர்.

அங்கிருந்து மறையூர் போலீசார் பில்ஜாவை திருச்சூருக்கு கொண்டு சென்று மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடந்தாண்டு படையப்பாவுக்கு மதம் பிடித்தபோது ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள், 10 க்கும் மேற்பட்ட கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தியது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *