அனுமந்தன்பட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
உத்தமபாளையம், பிப். 16: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காக கடந்த வாரம் ஊரிலிருந்து காரில் இருந்து புறப்பட்டு சபரிமலைக்கு வந்தனர். தொடர்ந்து சாமி தரிசனம் முடித்துக் கொண்டு மீண்டும் ஊருக்கு சென்றுகொண்டிருந்தனர்.
நேற்று மாலை அனுமந்தன்பட்டி – பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே கார் சென்று கொண்டிருந்தது.கோவிந்தன்பட்டி பூமாலை தியேட்டர் அருகே வந்தபோது காரில் திடீரென தீப்பற்றி உள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஐயப்ப பக்தர்கள், காரில் இருந்து வேகமாக கீழே இறங்கினர். சற்று நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றியது. இதனால் அந்த வழியே வந்த வாகனங்கள் அனைத்தும் 200 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உத்தமபாளையம் தீயணைப்பு அதிகாரிகள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.அவர்களை தொடர்ந்து உத்தமபாளையம் போலீசார் வந்தனர்.
அவர்கள் விசாரிக்கையில், கார் காஸ் நிரப்பிய சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்தது. சிலிண்டர் கார் என்பதால் நீண்ட தூர பயணம் வந்ததால் தீப்பற்றியது தெரிய வந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.