உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் சாவு
உத்தமபாளையம், பிப். 16: உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டி சன்னாசியப்பன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (27). இவர் கம்பம் நகரில் ஆட்டோ ஓட்டி வந்தார். தினமும் க.புதுப்பட்டியில் இருந்து கம்பத்திற்கு சென்று ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி விட்டு மீண்டும் இரவில் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து விஜய் கம்பத்தில் இருந்து ஆட்டோவில் ஊர் திரும்பினார். கம்பம்-புதுப்பட்டி ஆர்.ஆர்.ஸ்கூல் எதிரே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.