Tuesday, May 13, 2025
மாவட்ட செய்திகள்

பத்து ஆண்டுகளாக கிடப்பில் உள்ள மூணாறு மேம்பாலம் கட்டும் திட்டம்

மூணாறில் மேம்பாலம் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் தொடர் நடவடிக்கை இன்றி கிடப்பில் போடப்பட்டது.

சுற்றுலா நகரான மூணாறில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அதனை தவிர்க்கும் வகையில் நகரில் மறையூர் ரோட்டில் பெரியவாரை ஸ்டாண்ட் அருகில் இருந்து மாட்டுபட்டி ரோட்டிற்கும், அங்கிருந்து கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையை இணைக்கும் வகையிலும் மேம்பாலம் கட்ட முடிவு செய்து முதல்கட்டமாக 2015 -20-16 நிதியாண்டின் பட்ஜெட்டில் அரசு ரூ.36 கோடி நிதி ஒதுக்கியது. பாலம் கட்டுவதற்கு மண் பரிசோதனை உள்பட முதல்கட்ட பணிகள் 2018ல் பூர்த்தியானது. இதனிடையே பாலம் கடந்து செல்லும் பகுதியில் பல்வேறு கட்டடங்கள் பாதிக்கப்படும் என்பதால் எதிர்ப்புகள் கிளம்பின.

அதனால் கட்டடங்கள் பாதிக்காமலும், நகரின் மையப் பகுதியில் ஓடும் ஆற்றில் தூண்கள் அமையாத வகையில் வழித்தடம் மாற்றப்பட்டது.

அதன்படி முதல்கட்டமாக மாட்டுபட்டி ரோட்டில் இருந்து புறவழிச் சாலை வரை 244 மீட்டர் தூரமும், இரண்டாம் கட்டமாக மாட்டுபட்டி ரோட்டில் இருந்து பெரியவாரை ஸ்டாண்ட் வரை 322 மீட்டர் தூரமும் 19.3 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச் சாலையாக மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும் திட்டம் அறிவிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் தொடர் நடவடிக்கை இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.ராஜா கூறுகையில்,’மேம்பாலம் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். பாலம் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பணிகளை கே.ஆர்.எப்.சி., (கேரளா ரோடு பண்ட் கார்ப்ரேஷன்) நிறுவனம் கவனித்து வருகிறது. அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு செய்வார்கள்,’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *