ரயில்வே ஸ்டேஷன் – கம்பம் ரோடு திட்ட சாலை பயன்பாட்டிற்கு தேவை தேனியில் நெரிசல் குறையும் வாய்ப்பு
தேனி: தேனியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில்வே ஸ்டேஷன் முதல் கம்பம் ரோடு வரையிலான திட்டசாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தேனி மாவட்ட தலைநகராக உள்ளது. தேனிக்கு வியாபாரம், சுற்றுலா, வணிக நோக்கத்திற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட, மக்களும் தினசரி வந்து செல்கின்றனர். நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமம் அடைகின்றனர். பலரும் முகம் சுளிக்கின்றனர். நகரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகராட்சி பல ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டதிட்டசாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இந்த திட்டத்தில் உழவர் சந்தை- ரயில்வே ஸ்டேஷன்- கம்பம் ரோடு முக்கியமானதாகும். இந்த திட்டசாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் பெரியகுளம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறையும். ரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதி எளிதாக கிடைக்கும்.
தற்போது ரயில்வே கேட் மூடும் போது பயணிகள் பலர் ரயிலை தவறவிடுவது தொடர்கிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டசாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில்வே ஸ்டேஷன்-கம்பம்ரோடு திட்டசாலை அமைப்பதற்காக அப்பகுதியில் குடியிருப்போருடன் நகராட்சி பேச்சுவார்த்தை பணிகள் துவங்கி உள்ளது. இந்த ரோடு 600 மீ., நீளம், 18.3 மீ., அகலத்தில் அமைய உள்ளது. சர்வே பணிகள் தொடர்பாக அத்துறைக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம் என்றார்.