Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

நீர் நிலைகளில் இரவில் நடக்கும் மணல் கொள்ளை தாராளம்: பெரியகுளம் பகுதியில் விவசாயம் பாதிக்கும் அபாயம்

பெரியகுளம்: பெரியகுளம் தாலுகாவில் உள்ள ஆறுகள், பல சிற்றோடைகளில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. இங்கு நுாதனமாக மணலை சிறுக, சிறுக சேகரித்து தனியார் நிலங்களில் குவித்து இரவில் டிராக்டர், மாட்டு வண்டியில் கடத்தப்படுகிறது.

பெரியகுளத்தை சுற்றி வராகநதி, பாம்பாறு, செலும்பாறு, கல்லாறு, மஞ்சளாறு போன்ற ஆறுகளும், நூற்றுக்கணக்கான சிற்றோடைகள் செல்கின்றன. இதில் வரும் நீரை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் விவசாயம் அமோகமாக நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் நடந்த மணல் கொள்ளையால் நீர் நிலைகளில் மணற்பாங்கு குறைந்து வறண்டது. அதன்பின் இரவில் போலீசார், வருவாய்த்துறையினர் நடவடிக்கையால் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டது.

மணல் தட்டுப்பாடு, அதிகாரிகள் கெடுபிடியால் கட்டுமானப்பணி செய்வோர் எம்.சாண்ட், பி.சாண்ட் பயன்படுத்துகின்றனர். இச்சூழலில் சில மாதங்களாக பெரியகுளம் பகுதியில் மணல் கடத்தல் அமோகமாக நடக்கிறது. அதிகாலை 12:00 மணி முதல் 3:00 வரை மணல் கொள்ளை நடந்து வருகிறது. கட்டுமானங்களில் திருட்டு மணல் பயன்படுத்துகின்றனர். ஒரு டிராக்டர் மணல் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். ஒரு சில கும்பல் ஓடைகளில் மணல் அள்ளி 20 கிலோ கொண்ட ஒரு மூடை ரூ.100 வீதம், டிராக்டரில் 100 மூடை, 150 மூடை என ஏற்றி விற்கின்றனர். பெரிய குளம் சப்டிவிஷன் போலீசார் மணல் கடத்தலை கண்டு கொள்வதில்லை. மணல் கடத்தலுக்கு வசதியாகி விட்டது.

பெரியகுளம் ஒன்றியம் அலுவலகம் பின்புறம் வராகநதியில் நில ஆக்கிரமிப்புடன் மணல் கடத்தலும் தொடர்வதால் வடுகபட்டி வராகநதி பாலத்தின் அடிப்பகுதி பலமிழந்து வருகிறது. இதே போல் பெரியகுளத்திலிருந்து குள்ளப்புரம் வரை வராகநதியில் இரவில் மணல் கொள்ளை நடக்கிறது. இதே நிலை மாவட்டம் முழுவதும் பரவலாக நடக்கிறது. மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம் பாதிக்கும்

பாபு, தென்கரை விவசாயிகள் சங்க செயலாளர்,பெரியகுளம்: வராகநதியை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா, தென்னை, வாழை விவசாயம் நடக்கிறது. பல நுாறு கிணறுகளுக்கு நீர் ஊற்று கிடைக்கிறது. மணல் திருட்டினால் நிலத்தடி நீர்மட்டம் மட்டம் குறைந்து வருகிறது. நீர்வளத்துறை, வருவாய்த்துறை, போலீசார், கனிமவத்துறை சுழற்சி முறையில் ரெய்டு நடத்தி மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *