முகூர்த்தக்கால் ஊன்றி கும்பாபிஷேக பணிகள் துவக்கம்
சின்னமனுார்: சின்னமனுார் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ளதை முன்னிட்டு நேற்று காலை கோயிலில் நடந்த முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சியில் திரளான பொது மக்கள், பக்தர்கள் பங்கேற்றனர்
இக்கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகளை துவக்க பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஊர் முக்கிய பிரமுகர்கள் திருப்பணி செய்ய முன் வந்துள்ளனர்.
ஏற்கெனவே சிவகாமியம்மன் கோயிலில் திருப்பணி முடிந்து பிப்.10ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்நிலையில் பெருமாள் கோயிலில் கடந்த நவ.20ல் பாலாலயம் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று காலை முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அதிகாலை முதல் மூலவருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோயிலின் வடமேற்கு மூலையில் முகூர்த்த கால் ஊன்றப்பட்டது.
இந்நிகழ்வில் திருப்பணி தலைமை ஒருங்கிணைப்பாளர் துர்காவஜ்ரவேல், காயத்ரி பெண்கள் மெட்ரிக் பள்ளி தாளாளர் விரியன் சாமி, குமரேசன், நகை கடை நிர்வாகி கார்த்திக், நடராசன், மேயர் ராம் பள்ளி நிர்வாகி சிவராமன், ஆத்திகுமார், பிரமலை கள்ளர் சங்க தலைவர் மலைச்சாமி, கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பணி தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ‘திருப்பணி வேலைகள் ஹிந்து சமய அறநிலையத்துறை பொறியாளரின் மதிப்பீட்டை தொடர்ந்து, இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. குருவாயூர் கிருஷ்ணன் கோயில் போன்று பணிகள் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட உள்ளன. 19 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ளதால் அனைவரும் பங்கேற்று சிறப்பாக பணிகள் மேற்கொள்ள உள்ளோம்.’, என்றார். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நதியா செய்திருந்தார்.