கண்மாய்களில் நீர் குறைந்துள்ளதால் வண்டல் மண் எடுக்க அனுமதி தேவை
கம்பம் : மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் வண்டல் மற்றும் களிமண் எடுத்துக் கொள்ள அனுமதியை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான 159 கண்மாய்கள், குளங்களில் வண்டல் மண், களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ள ஆண்டுதோறும் கோடை காலத்தில் அரசு அனுமதி வழங்கி வருகிறது.
விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களும் மண் எடுத்துக் கொள்ளலாம். மாவட்டத்தில் 159 கண்மாய்களில் மண் அள்ள அனுமதி வழங்கப்படும் .
குறிப்பாக பெரியாறு வைகை வடிநில உபகோட்டத்தில் உள்ள ஒடப்படி, ஒட்டுகுளம், வீரப்ப நாயக்கன்குளம், குப்பு செட்டிகுளம், கழுநீர் குளம், தாமரைக்குளம், கருங்கட்டான்குளம், செங்குளம் ஆகிய குளங்களில் இருந்த தண்ணீர் தற்போது குறைந்துள்ளது.
இந்நிலையில் கண்மாய் மண்ணை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி அதன் முடிவுகள் தெரிந்த பின் வண்டல் அள்ள முறையாக அனுமதி வழங்கப்படும்,
எனவே, தற்போது மண் பரிசோதனைக்கு அனுப்பினால், முடிவுகள் வர சில வாரங்கள் ஆகும். அதன்பின் மனுக்கள் பெற்று அனுமதி வழங்க அவகாசம் இருக்கும்.
எனவே கலெக்டர் ரஞ்சித் சிங் மண் அள்ளுவதற்கு விரைந்து முடிவெடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வண்டல் அள்ளுவது விவசாயத்திற்குதான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.