பாலம் கட்டும் பணி தாமதத்தால் 5 கிராம மக்கள் தவிப்பு மாற்றுப்பாதை வசதியின்றி பல கி.மீ. , சுற்றிச்செல்லும் அவலம்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், சக்கமாபட்டியில் நாகலாறு ஓடையின் குறுக்கே தரைப் பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் கட்டும் பணி முழுமை பெறுவதில் தாமதமாகும் நிலையில் மாற்றுப்பாதை வசதி இல்லாததால் 5 கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கதிர்நரசிங்கபுரத்தில் இருந்து பழையகோட்டை செல்லும் ரோட்டில் சக்கம்மாபட்டியில் நாகலாறு ஓடையின் குறுக்கே இருந்த தரை பாலத்தை மழைக்காலத்தில் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இப்பகுதியில் புதிய பாலம் கட்ட பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். மாநில ஒருங்கிணைந்த ஒப்படைப்பு வருவாய் திட்டத்தில் இப்பகுதியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த பல மாதமாக நடந்து வருகிறது. பாலம் கட்டும் பணியால் இப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கதிர்நரசிங்கபுரத்திலிருந்து சிவலிங்கம்பட்டி, பழையகோட்டை, ராமகிருஷ்ணாபுரம், அழகாபுரி, ராயவேலூர், பாலக்கோம்பை கிராமங்களுக்கு செல்ல சேவாநிலையம், தெப்பம்பட்டி வழியாக சில கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் கிராம மக்கள் தினமும் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர். இப் பிரச்னை குறித்து பொது மக்கள் கூறியதாவது:
ஓடையில் இறங்கி செல்வதில் சிரமம்
செல்வராஜ், சிவலிங்கம்பட்டி: நேராக அமைந்திருந்த ரோட்டில் தரைப்பலத்தை அகற்றி தற்போது ‘எஸ் பெண்டு’ ரோட்டில் பெரிய பாலமாக மாற்றியுள்ளனர். இதனால் போக்குவரத்திற்கும் வாகனங்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுத்துவதாக உள்ளது. மாற்றுப்பாதை வசதி ஏற்படுத்தவில்லை. ஓடையில் கரடு முரடான பாதையில் பொதுமக்கள் ஏறி இறங்கி செல்கின்றனர். இருசக்கர வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்களில் செல்ல முடியவில்லை. கட்டுமானப் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை
ஜெகநாதன், சக்கம்மாபட்டி: பாலம் பணிகள் துவங்கி ஓர் ஆண்டுகிறது இன்னும் முடிந்த பாடில்லை. இடையில் இரு மாதங்கள் பணிகள் நடைபெறவில்லை. தற்போது பாலத்தின் அடியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றுவதற்கும் நடவடிக்கை இல்லை. கழிவு நீரால் இப்பகுதியில் சுகாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது. மாற்றுப் பாதைக்கான வழி ஏற்படுத்தவில்லை. கரடு முரடான ஓடையில் இறங்கி வாகனங்கள் சென்றால் கவிழ்ந்து விடும். பள்ளி, கல்லூரி வாகனங்கள் சக்கமாபட்டியில் மாணவர்களை ஏற்றி இறக்கிவிட்டு திரும்ப கதிர்நரசிங்கபுரம், சேவா நிலையம் தெப்பம்பட்டி வழியாக பழையகோட்டை, ராமகிருஷ்ணாபுரம் கிராமங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய முடியவில்லை.
டவுன் பஸ் சேவை நிறுத்தம்
உதயசூரியன்,சக்கம்மாபட்டி: இப்பகுதி வழியாக அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. பழைய கோட்டையில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் 2 கி.மீ., தூரம் நடந்து சக்கம்மாபட்டியில் ஓடையின் மறுபுறம் சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது. கடந்த ஓராண்டாக இந்நிலை நீடிக்கிறது. மாற்றுப்பாதை இல்லாததால் இரவு நேரங்களில் கரடு முரடான ஓடையில் இறங்கி கடந்து செல்வது ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.