100 நாட்கள் நிறைவு: சண்முகாநதி அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தம்
கம்பம் : சண்முகா நதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் சண்முகா நதி அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52.5 அடியாகும். அணையில் இருந்து 26 அடி வரை தண்ணீரை எடுத்து பயன்படுத்தலாம். 26 அடிக்கு மேல் தண்ணீர் எடுக்க முடியாது. இந்த அணையின் மூலம் நேரடி பாசன வசதி அளிக்காவிட்டாலும், கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர வெகுவாக பயன்படும்.
ஆண்டுதோறும் நவம்பரில் இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு என தண்ணீர் விடுவிப்பது வழக்கம்.
இந்தாண்டு கடந்த நவ.12ல் சண்முகா நதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 14.47 கன அடி திறக்கப்பட்டது. அணையின் நீர் மட்டம் 46 அடியாக இருந்த போது கடந்த டிச.10ல் மழை பெய்தது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 52.5 அடியாக உயர்ந்தது.
அணைக்கு விநாடிக்கு 103 கன அடி நீர் வரத்து இருந்தது. இந்நிலையில் நவ.12 ல் திறக்கப்பட்ட தண்ணீர் பிப்.22ல் நிறைவடைந்தது. 100 நாட்கள் விநியோகம் செய்த நிலையில் அணையின் நீர் மட்டம் 26.25 அடியாக குறைந்ததால், அணையில் இருந்து தண்ணீர் விடுவிப்பது நிறுத்தப்பட்டது.