பி.டி .ஆர். , பெரியா ர் கால்வாய்களில் தண்ணீர் திறப்பில் குளறுபடி
தேனி: தேனி ஒன்றியத்தில் உள்ள பி.டி.ஆர்., பெரியார் கால்வாய்களில் தண்ணீர் திறப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் நெல் சாகுபடியை தவிர்த்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு நீர் தேனி ஒன்றிய பகுதி விவசாயிகளின் பயன்பெறும் வகையில் சின்னமனுார் அருகே வேப்பம்பட்டியில் இருந்து பி.டி.ஆர்., பெரியார் என இரு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பி.டி.ஆர்., கால்வாய் சீப்பாலக்கோட்டை, ஜங்கால்பட்டி, வெங்கடாசலபுரம், கோவிந்தநகரம், அம்பாசமுத்திரம், பாலகிருஷ்ணாபுரம் வழியாக கொடுவிலார்பட்டி வருகிறது.
இக் கால்வாய் நீளம் 14.40 கி.மீ. ஆகும். இதன் மூலம் 11 கண்மாய்கள் நிரம்பி 1726 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 11.90 கி.மீ.,துார பெரியார் கால்வாய் தாடிச்சேரி, தப்புக்குண்டு, காட்டுநாயக்கன்பட்டி, தர்மாபுரி, மல்லையகவுண்டன்பட்டி, வழியாக கொடுவிலார்பட்டி கண்மாய் வருகிறது. இதன் மூலம் 6 கண்மாய்கள், 3420 ஏக்கர் நிலங்கள் நேரடி பயனடைகின்றனர்.
ஆண்டு தோறும் அக்டோபர் முதல் பிப்., வரை இரு வாய்க்காலிலும் முறை வைத்து தண்ணீர் திறக்கப்படும். பி.டி.ஆர்., கால்வாயில் 16 நாள், பெரியார் கால்வாயில் 16.5 நாள் என மாற்றி, மாற்றி 4 முறை வினாடிக்கு 100 கனஅடிவீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். இதனால் இப் பகுதி நிலங்கள் பாசன வசதி பெறும். இந்தாண்டு 2024 அக்., 7 ல் திறக்கப்பட்டது. இதுவரை ஒரு முறை மட்டுமே இரு கால்வாயிலும் தண்ணீர் வந்துள்ளது.
தண்ணீர் திறப்பு கால அவகாசம் பிப்., 7 ல் முடிய உள்ளதாகவும், முல்லைப்பெரியாறு அணையில் போதிய அளவில் தண்ணீர் இருந்தும், கால்வாய்களில் நீர் திறப்பில் குளறுபடி நடந்துள்ளது. என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
விசாரணை நடத்த வேண்டும்
பிரபாகரன், தலைவர், பி.டி.ஆர்., பாசன வாய்க்கால் சங்கம், பாலகிருஷ்ணாபுரம்: இந்தாண்டு தண்ணீர் திறப்பில் குளறுபடியாக உள்ளது. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை தவிர்த்து வேறு பயிர்கள் சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும் இதே நிலை தொடர்ந்தால் இரு கால்வாய் பாசன பகுதிகளும் வறண்ட பகுதியாக மாறும். குளறுபடி
குறித்து மாவட்ட நிர்வாகம் விவசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அனைத்து கண்மாய்களும் நிரம்பும்
பெரியாறு வைகை வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மயில்வாகனம் கூறுகையில், ‘விவசாயிகளுக்கு போதிய அளவு நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து கண்மாய்களும் நிரம்பும் வகையில் நீர் திறந்து வருகிறோம். இதுவரை 6 கண்மாய்கள் முழுவதும் நீர் நிறைந்துள்ளது. பிப்.,7 க்கு பிறகும் தண்ணீர் வழங்க முயற்சி மேற்கொள்வோம்’, என்றார்.